எரிபொருளுக்கான அரச மானியம் இந்த மாதமும் தொடர்ந்து வழங்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள தற்போதைய சூழலில், எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் எவ்வித தயக்கமும் இன்றி உதவி வழங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
உலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்வடைந்த காலப்பகுதியில், முழுமையான விலையேற்றத்தை நுகர்வோர் மீது சுமத்தாமல் அதன் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் எரிபொருள் மானியங்களுக்காக 57 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் இந்தச் சுமையின் ஒரு பகுதியைத் தாங்கிக்கொண்டன. தற்போது உலக சந்தையில் எண்ணெய் விலைகள் ஓரளவுக்குக் குறைந்துள்ள நிலையில், அதன் நன்மைகளைப் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் நோக்கில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
