ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பேருந்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கலந்துரையாடல் ஒன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
அந்தக் கலந்துரையாடலில் பேருந்து கட்டண திருத்தங்கள் தொடர்பான சதவிகிதங்கள் குறித்துப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னரே அமுல்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைமை பணிப்பாளர் நிலன் மிராண்டோ தெரிவித்தார். எரிபொருள் விலை மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்த பிறகு, பேருந்து கட்டண உயர்வின் சரியான சதவீதம் மற்றும் புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ஆகியவை விரைவில் பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
