இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வுத்துறையின் வானிலை ஆய்வாளர் ஸ்ரீமல் ஹெரத் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறைவடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை தற்போது பாதித்துள்ள எல்நினோ நிலைமை அடுத்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலம் வரையிலும் தொடரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் ஸ்ரீமல் ஹெரத் தெரிவித்துள்ளார். இதன் தாக்கத்தால் தற்போது வறட்சியான காலநிலையை எதிர்கொண்டு வரும் பகுதிகளில் நிலைமை மேலும் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் காற்றின் வேகம் குறைவடையக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதுடன், உடல் வெப்பநிலையும் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
