2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தலா ஒரு சோடி காலணிகளை வழங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
வவுச்சர் முறை மற்றும் விநியோகம்:
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய ஒவ்வொரு மாணவருக்கும் காலணிகளைக் கொள்வனவு செய்வதற்காக 3,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. 2026 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முறையைப் போன்றே இம்முறையும் விநியோகம் இடம்பெற உள்ளது.
இதன்படி, மேல், தென், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் ஊடாகப் பாடசாலை மட்டத்திலேயே காலணிகள் விநியோகிக்கப்படவுள்ளன. அதேவேளை, மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாணவர்கள் சந்தையிலிருந்து நேரடியாகத் தமக்குத் தேவையான காலணிகளைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு:
இந்தத் திட்டத்தை 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணை முடிவடைவதற்குள் பூர்த்தி செய்து முடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த உதவித் திட்டத்தின் ஊடாக, 8,36,571 பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்கள் பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான இந்த அறிவிப்பு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
