கொழும்பு, குருந்துவத்தை பகுதியில் மசாஜ் நிலையப் போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 11 பெண்கள் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியின் உரிமையாளர் பொலிசாரின் பிடியில் சிக்காமல் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதிக்குக் கிடைத்த விசேட ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட அதிநவீன உளவு நடவடிக்கையினைத் தொடர்ந்தே இந்தச் சுற்றிவளைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாத கால விசா பெற்றுமாத்திரம் இலங்கைக்கு வந்துள்ள இந்தப் பெண்கள், குறித்த மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்து சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் மாதந்தோறும் இலட்சக்கணக்கில் பணம் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெண் ஒருவருக்கு 20,000 முதல் 30,000 ரூபா வரை கட்டணமாக அறவிடப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 11 தாய்லாந்து பெண்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமறைவாகியுள்ள விடுதியின் உரிமையாளரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
