வட மாகாண நீச்சல் போட்டிகளில் யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை!

Valluvan Media
0

 





வட மாகாண நீச்சல் போட்டிகளில் யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை – தேசிய மட்டத்திற்கு மாணவர்கள் தகுதி!

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் 05.06.2026 மற்றும் 06.06.2026 ஆகிய திகதிகளில் கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட நீச்சல் போட்டிகளில், யா/தம்பாட்டி அ. த. க. வித்தியாலய மாணவ, மாணவிகள் தங்களது அசாத்திய திறமையால் பல பதக்கங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். போதிய வசதிகள் குறைந்த சூழலிலும், முறையான பயிற்சி மற்றும் விடாமுயற்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு களம் கண்ட இப்பாடசாலை நீச்சல் வீரர்கள், மாகாண மட்டப் போட்டிகளில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளனர்.


​ஆண்கள் பிரிவில் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் இம்மாணவர்கள் அசுர வேகத்தைக் காட்டியுள்ளனர். குறிப்பாக, G. டென்சில்ராஜ் என்ற மாணவன் 50M, 100M மற்றும் 200M Breaststroke ஆகிய மூன்று போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்று, 3 தங்கப் பதக்கங்களை அள்ளியுள்ளார். இவரைப் போன்றே A. யனுஷன் என்ற மாணவனும் 50M, 100M மற்றும் 200M Backstroke ஆகிய மூன்று போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்து, மேலும் 3 தங்கப் பதக்கங்களை பாடசாலைக்கு ஈட்டித் தந்துள்ளார்.


​இவர்களுடன் 14 வயதுப் பிரிவில் போட்டியிட்ட T. ராகுல் 50M Breaststroke போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், M. விதுஜன் 50M Breaststroke போட்டியில் வெள்ளி பதக்கத்தையும், 100 மற்றும் 200M போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும் 18 வயது பிரிவின் கீழ் R.ரதீசன் 50M Freestyle போட்டியில் வெண்கல பதக்கத்தையும் வென்று சாதனைப் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டனர். தனிநபர் போட்டிகள் மட்டுமன்றி, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவினருக்கான 4x50 M Freestyle Relay மற்றும் 4x50M Mix Relay ஆகிய இரண்டு குழுப் போட்டிகளிலும் தம்பாட்டி பாடசாலை அணி இரண்டாம் இடத்தைப் பெற்று இரண்டு வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்துள்ளது.


​ஆண் வீரர்களுக்கு இணையாக தம்பாட்டி பாடசாலையின் வீராங்கனைகளும் நீச்சல் தடாகத்தில் தங்களது முத்திரையைப் பதித்துள்ளனர். K. கனிஸ்ரா என்ற மாணவி 50M மற்றும் 100M Breaststroke போட்டிகளில் இரு தங்கப் பதக்கங்களையும், 50M Freestyle போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளார். மேலும், S. சனுஷா என்ற மாணவி 50M Backstroke போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 50M freestyle பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளதோடு, R. யனுஷா என்ற மாணவி 100M freestyle போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று மாகாண மட்டத்தில் தடம் பதித்துள்ளார்.


​மாகாண மட்ட நீச்சல் போட்டிகளில் பல தங்க, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த யா/தம்பாட்டி அ. த. க. வித்தியாலயத்தின் இந்த இளம் நீச்சல் விண்மீன்கள் அனைவரும், தங்களது அசாத்திய திறமையின் மூலம் அடுத்ததாக நடைபெறவுள்ள தேசிய மட்ட நீச்சல் போட்டிகளுக்கு தகுதி பெற்றுத் தெரிவாகியுள்ளனர். 

தமது பாடசாலைக்கும், பெற்றோருக்கும், தீவக கல்வி வலயத்திற்கும், வட மாகாணத்திற்கும் மிகப்பெரிய பெருமையைத் தேடித்தந்துள்ள இம்மாணவர்களை பாடசாலை பதில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் திரண்டு நெஞ்சாரப் பாராட்டி, தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.











Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top