சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (29) பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
பாதுகாப்புப் புகலிடமாக முதலீட்டாளர்கள் தங்கத்தைத் தெரிவு செய்வதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,493.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 69.77 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இந்தத் திடீர் விலை மாற்றத்திற்குப் பின்னால் பல முக்கிய காரணிகள் இருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன:
அதாவது, ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
மேலும், சர்வதேச நாணயச் சந்தையில் டொலரின் மதிப்பு அதிகரித்து வருவது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச் சந்தைகளில் நிலவும் தளம்பல் நிலையால், முதலீட்டாளர்கள் தங்களின் சொத்துக்களைப் பாதுகாக்கத் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
எனினும், சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி விலை அதிகரிப்பு காரணமாக, மேலும் இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து அதிக அவதானம் செலுத்தி வருகின்றனர்.

Post a Comment