Top News

அதிரடியாக உயர்ந்த சில அத்தியாவசிய பொருட்களின் விலை! விலை விபரம் இதோ..

 எரிபொருள் விலை அதிகரிப்பைச் சாட்டாக வைத்து, சந்தையில் பருப்பு மற்றும் நெத்திலி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வியாபாரிகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




கடந்த மூன்று வாரங்களுடன் ஒப்பிடுகையில், மொத்த மற்றும் சில்லறை சந்தையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

ஒரு கிலோகிராம் பருப்பு சுமார் 350 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. (மூன்று வாரங்களுக்கு முன்னர் இதன் விலை சுமார் 270 ரூபாவாக இருந்தது).

சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் நெத்திலி 1,300 ரூபாவைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. (முன்னர் 1,100 ரூபாவாக இருந்தது).

இதேவேளை இதர அத்தியாவசியப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் சிவப்பு வெங்காயத்தின் விலையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி.சுப்பிரமணியம் இது குறித்துக் கூறுகையில், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை எனவும், இடைத்தரகர்களே செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

"அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் மார்ச் மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளன.

ஏப்ரல் முதல் வாரத்தில் பருப்பு விலை மீண்டும் 265 - 270 ரூபா வரை குறையும். சித்திரைப் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையில் அதிகபட்சம் 20 ரூபா மட்டுமே மாற்றம் ஏற்படலாம்" என அவர் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இது குறித்துத் தெரிவிக்கையில்,

பருப்புக்குக் கட்டுப்பாட்டு விலை இல்லாததால், சில்லறை விலையில் கடுமையான தலையீடுகளைச் செய்ய முடியாது. இருப்பினும், பொருட்கள் பதுக்கப்பட்டால் நுகர்வோர் விவகார அதிகார சபை ஊடாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சித்திரைப் புத்தாண்டுக்குத் தேவையான 90 சதவீதமான அத்தியாவசியப் பொருட்கள் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

பால்மா, மாவு, பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்படமாட்டாது என அந்தந்த சங்கங்கள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்களைப் பரிசோதிக்கும் இடவசதி குறைவாக இருப்பதாலேயே சிறு தாமதங்கள் ஏற்படுவதாகவும், தற்போது அந்த இடவசதிகள் விரிவாக்கப்பட்டு வருவதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார, தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும், பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post