ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் காத்திருக்கும் முதியவர்களுக்கு நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபையினால், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுகளை நாளை (03.07.2026) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு விபரங்கள்:
இந்தத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான கொடுப்பனவுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படவுள்ளன. அதற்கமைய, முதற்கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 621,761 பயனாளிகளுக்காக 3,108,805,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக 380,695,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்பு:
இந்த நிதிகள் அனைத்தும் தகுதியான பயனாளிகளின் அஸ்வெசும வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்பிடப்படவுள்ளன. இதன்படி, தமக்குரிய கொடுப்பனவுத் தொகையை பயனாளிகள் அனைவரும் நாளை முதல் தத்தமது அஸ்வெசும வங்கி கணக்குகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் (செயற்பாடுகள்) டி.எல். பி. ரிஷான் தர்மசேன தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாகக் காத்திருந்த முதியவர்களுக்கு, இந்த நிதி உதவிகள் அவர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றப் பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
