நாட்டின் பல மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இந்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை மற்றும் காற்று எச்சரிக்கை:
மேற்கூறிய பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை நிலவும் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
