தீவிரமடையும் எல் நினோ காலநிலை! அவசரமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Valluvan Media
0

 பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' காலநிலை மாற்ற நிலை, தற்போது ஆரம்பத்தில் பலவீனமாக இருந்தாலும் வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.



​காலநிலை மாற்றத்தின் தாக்கம்:

​உலகளாவிய காலநிலை முன்னறிவிப்புகளின்படி, இந்த காலநிலை மாற்றத்தினால் இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார். நவம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரையிலான காலப்பகுதியில் 'எல் நினோ' நிலை மிகவும் தீவிரமடைவதற்கு 63 விழுக்காடு வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை, இது தீவிரமடையாமல் இருப்பதற்கு 33 விழுக்காடு (மூன்றில் ஒரு பங்கு) வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் குறிப்பிடுகிறது.

​நீர் மற்றும் விவசாய முகாமைத்துவம்:

​இந்த மாற்றத்தினால் தற்போதுள்ள தென்மேற்கு பருவமழை குறைவடையக்கூடும். இருப்பினும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கமான மழையளவை விட அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், நீரை மிகக் கவனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகும். இதன்படி, விவசாய நடவடிக்கைகள், மின்சார உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரைச் சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​அரசாங்கத்தின் விசேட நடவடிக்கைகள்:

​இக்காலநிலை மாற்றத்திற்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக, அனைத்து அமைச்சுகளையும் ஒன்றிணைத்து எதிர்வரும் 2 வாரங்களுக்குள் விசேட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்திகே தெரிவித்துள்ளார். எல் நினோ தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக, எதிர்வரும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளை உரிய காலத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்குமாறு விவசாயிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top