நிலக்கரி மோசடியினால் ஏற்பட்ட நேரடி நட்டம் காரணமாகவும் இதனால் மின்சார உற்பத்திக்காக டீசலை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மறைமுக நட்டம் காரணமாகவும்
நிச்சயமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும். அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வழங்கிய 695 மில்லியன் டொலர் கடனுக்கு நூற்றுக்கு 8வீத வட்டி செலுத்த வேண்டி இருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்கட்சி திங்கட்கிழமை (1) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் 57 பில்லியன் ரூபா மட்டுமே அனுமதித்துள்ளது. அந்த 57 பில்லியன் ரூபா பெரும்பாலும் இந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிடும். அப்படியானால், அடுத்த மாதம் வரும்போது மீண்டும் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில்தான் மத்திய கிழக்கில் பணிபுரியும் சகோதர, சகோதரிகளின், அதேபோன்று கொரியாவில் பணிபுரியும் பிள்ளைகளின் உழைப்பு நமது ஜனாதிபதிக்கு நினைவுக்கு வருகிறது.
அப்படிப்பட்ட கடின உழைப்பில்தான் டாெலர்கள் ஈட்டப்பட்டுள்ளன. ஆனால் பெலவத்தையிலிருந்து மோசடி மற்றும் ஊழல் மூலமாக இந்த டாெலர்களைக் கொள்ளையடிக்கும் போது, அத்தகைய எந்தவொரு இரக்கமும் ஜனாதிபதிக்கு இருக்கவில்லை.
'நான் இவற்றை அதிகரிக்கிறேன்' என்று ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். நாமும் சர்வதேச நாணய நிதியத்திற்கு மிகவும் தெளிவாகக் கூறுகிறோம், அவர்களின் நிபந்தனைகளில் நல்லாட்சி நிபந்தனைகளும், ஊழல் எதிர்ப்பு நிபந்தனைகளும் இருந்தன.
அவை குறித்து ஆராய்ந்து பார்க்காமல், இந்த அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்ல அனுமதிப்பது குறித்த நமது எதிர்ப்பை சர்வதேச நாணய நிதியத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் , நாணய நிதியத்திடடமிருந்து 695 மில்லியன் டாெலர்கள் கிடைத்தன, அதன் வட்டி 8வீதமாகும். மிக அதிக வட்டிக்குக் கிடைத்த ஒரு கடன் இது.
மாறாக சாதாரண 0.1 வட்டி கொண்ட ஜைக்கா கடன் அல்ல. 8 வீதத்துக்கு அதிகமாக இருக்குமே தவிர குறையாது.
அதேபோன்று, இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறின், பொருளாதார வளர்ச்சி வேகம் 5 வீதத்திலிருந்து 3 வீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டில் அது 3வீதமாகக்கூட இருக்காது.
அடுத்ததாக பணவீக்கம், மறை தசம் ஐந்திலிருந்து ஐந்து வீதத்தைத் தாண்டிய அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேபோன்று தேசிய சேமிப்பு மறை தசம் நான்கு ஆகும். அதற்கு முந்தைய ஆண்டில் அது நேர் தசம் ஏழு ஆக இருந்தது. இதன் அர்த்தம் என்ன? அரசாங்கத்தின் வருமானத்திலிருந்து அரசாங்கத்தின் மீண்டெழும் செலவுகளைக் கழித்த போது, இந்த குறுகிய காலத்திற்குள் அது மீண்டும் மறைப் பெறுமானமாக மாறியுள்ளது.
இதனால்தான் இந்நாடு வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்று நாம் கூறுகிறோம்.
வெளிப்புற வெளிநாட்டுக் கடன்களின் அளவு இரண்டு பில்லியன் டாெலர்களால் அதிகரித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் முதலீடுகள் 2 வீதத்தால் குறைந்துள்ளன. அடுத்ததாக அரசாங்கத்தின் முதலீடு என்று காட்டியிருப்பது ஒரு நகைச்சுவையான இலக்கமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 வீதம், அதாவது இரண்டு டிரில்லியன் என்று காட்டியிருக்கிறார்கள்.
அந்த இரண்டு டிரில்லியன் எப்படி உருவானது? அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் மூலதனச் செலவு 1500 பில்லியன் உள்ளது என்றும், 'தித்வா' சூறாவளியிலிருந்து மீள்வதற்காக மேலும் 500 பில்லியனை ஒதுக்குவதாகவும் கூறினார் அப்படியானால் மொத்தம் 2000 பில்லியன்.
இந்த ஜூன் முதலாம் திகதி வரை, கிராமங்களிலோ அல்லது இந்நாட்டின் வேறு எங்காவது ஏதேனும் அபிவிருத்தி நடந்துள்ளதா? அரசாங்கத்தின் முதலீடு ஏதேனும் உள்ளதா? அரசாங்கத்தின் முதலீடு இல்லாதபோது என்ன நடக்கும்? நாம் எதிர்பார்க்கும் அந்த பொருளாதார வளர்ச்சி வேகம் மீண்டும் கிடைக்காது.
அரசாங்கத்தின் முதலீடுகள் நடக்காததால், அந்த 3வீத வளர்ச்சி வீதம்கூட கிடைக்காது என்பதை நான் மிகவும் தெளிவாகக் கூறுகிறேன்.
ஜனாதிபதி உட்பட இந்த அரசாங்கத்திற்கு அரச நிர்வாகம் குறித்த திறமையும் இல்லை, அறிவுசார் முதிர்ச்சியும் இல்லை, அவர்களிடம் இருப்பது அகந்தை மட்டுமே.
சமூக ஊடகங்களில் சில விஷயங்களை விதைத்து, கருத்துக்களைப் பதிவிட்டு, அந்தப் படைகளை இயக்கினால் நாம் தப்பித்துவிட்டோம் என்று நினைக்கும் ஒரு சிந்தனை உருவாகியுள்ளது.
அடுத்து முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் கடன் வாங்கச் செல்லும்போது, 18வீத வாட் வரி, 2.5வீத சமூக பாதுகாப்பு ஈட்டு வரி , 12வீத வட்டி என இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, 100 ரூபாயை முதலீடு செய்தால் 35 ரூபாயைச் செலுத்திவிட்டுத்தான் தொழிலைத் தொடங்க வேண்டியிருக்கும்.
இதனால் எந்தவொரு வியாபாரத்தையும் நமது முதலீட்டாளர்களால் செய்ய முடியாமல் போகும். பொருளாதாரம் கீழ்நோக்கிச் செல்லும்.
எனவே, மத்திய கிழக்கு போர் காரணமாக இந்நெருக்கடி எவ்வகையிலும் ஏற்படவில்லை. இதைவிடக் கடுமையான நெருக்கடிகள் இருந்த காலங்களில் இலங்கையில் அந்நெருக்கடிகள் முகாமைத்துவம் செய்யப்பட்டன.
நான் சுட்டிக்காட்டியது போல, இன்று உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது, ஆனால் நமது அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்துச் செல்கிறது, எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
அதேபோன்று, இலவசமாகக் கிடைக்கும் சூரிய சக்தி, இலவசமாகக் கிடைக்கும் காற்றுச் சக்தி மற்றும் மழைக்காலத்தில் இலவசமாகக் கிடைக்கும் நீர்மின்சாரம் போன்றவற்றை வெட்டிக்குறைத்து நிலக்கரி மற்றும் எரிபொருட்களை எரித்து நமது மக்களின் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கிறார்கள், மக்கள் மீது சுமையைச் சுமத்துகிறார்கள், நமது மக்களின் தொழில்கள் வீழ்ச்சியடையும் நிலைக்குத் தள்ளியுள்ளனர்.
எனவே,நிலக்கரி மோசடியினால் ஏற்பட்ட நேரடி நட்டம் காரணமாகவும் இதனால் மின்சார உற்பத்திக்காக டீசலை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மறைமுக நட்டம் காரணமாகவும் நிச்சயமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் என்றார்.
