அதிபர்களுக்குள்ள சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளை அரசாங்கம் உடனடியாகத் தீர்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற விசேட சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உடனடியாக இந்த விவகாரங்களில் தலையிடத் தவறினால் கல்வித் துறை மேலும் முடக்கத்தைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பிரதமருடன் பேச்சுவார்த்தை - ஜூன் 30-க்குள் தீர்வு வேண்டி கெடு!
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சமூகத்தை வாட்டும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்:
- சம்பள நிலுவை: ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாட்டில் தற்போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு பங்குகளையும் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.
- பதவி உயர்வு முடக்கம்: கடந்த 2025 ஜூலை 1 முதல் பதவி உயர்வு முறைமையை மாற்றி, பரீட்சை மூலமாகப் பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அதற்கான எந்தவொரு செயல்பாடும் நடைமுறைக்கு வரவில்லை.
- பிரதமருடன் சந்திப்பு: கல்வித் துறையில் நிலவும் வலயரீதியான பிரச்சினைகள் குறித்து கடந்த சனிக்கிழமை பிரதமருடன் விரிவாகப் பேசியுள்ளோம். இதற்கான உரிய தீர்வை வரும் ஜூன் 30-ஆம் திகதிக்குள் அரசாங்கம் வழங்க வேண்டும்.
கிழக்கு மாகாண இடமாற்ற முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள்:
தற்போது அநேகமாகத் தொழிற்சங்கத் தலைவர்களே கல்வித் துறையுடன் இணைந்த அமைச்சர்களாக உள்ள நிலையிலும், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை என அவர் சாடினார்.
விசேடமாகக் கிழக்கு மாகாணத்தில் இடமாற்ற சபை உருவாக்கப்பட்டுச் சில இடங்களில் முற்றிலும் கொள்கைகளுக்கு முரணான, முறையற்ற இடமாற்றங்கள் நடைபெறுகின்றன. இதனால் பல ஆசிரியர்கள் கடுமையான துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இடமாற்றங்கள் முறையான சுற்றறிக்கையின்படி மட்டுமே நடக்க வேண்டும்.
அதேபோல், பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு அரசியல் தலையீடுகள் இன்றி, நேர்முகப்பரீட்சை மூலமாக தகுதியானவர்கள் முறையாக நியமிக்கப்பட வேண்டும் என்றும், கல்விச் சீர்திருத்தம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் அனைத்தும் ஜனநாயக ரீதியாக மக்கள் சார்பாக அமைய வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் தனது உரையில் விவரித்துள்ளார்.
