அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கும் இனி கொடுப்பனவு! வெளியான மகிழ்ச்சி தகவல்

Valluvan Media
0
அரசாங்க ஓய்வூதிய நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியற்ற, முறைசாரா துறைகளில் உள்ளவர்களுக்கான “சுரெகும” (Surekuma) ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்தும் திறந்திருக்கும் என இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது.



அரச ஓய்வூதியம் இல்லாத அனைத்துத் தரப்பினருக்கும் முதிர்ந்த வயதில் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையில் 18 வயது முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட, அரசாங்க ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாத எந்தவொரு நபரும் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.

இத்திட்டத்தின் கீழ் இணையும் உறுப்பினர்கள், தங்களின் நிதிப் பங்களிப்புத் திறனுக்கு ஏற்ப தமக்கான ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்துகொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தவணைக் கட்டணங்களை ஒரே தடவையிலோ, மாதாந்தம், காலாண்டு அல்லது வருடாந்த அடிப்படையிலோ செலுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை வாய்ந்த கட்டணத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

உறுப்பினர்கள் 60 வயதைப் பூர்த்தி செய்தவுடன் வாழ்நாள் முழுவதற்குமான மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், மேலும் பல சமூகப் பாதுகாப்பு நன்மைகளும் இதன்கீழ் கிடைக்கவுள்ளன.

நிரந்தர அல்லது பகுதியளவு வலது குறைந்தோருக்கான காப்புறுதி உதவி,உறுப்பினர் மரணமடையும் பட்சத்தில் இறுதிச் சடங்குகளுக்கான நிதியுதவி மற்றும் மனைவிக் காப்புறுதி ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் 011 288 6088 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும், அல்லது 077 144 3044 என்ற வட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்தின் ஊடாகவும் இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையைத் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top