இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” (National QR Payment Promotion Programme) இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிவர்த்தனைகளுக்கும் வசூலிக்கப்படும் வர்த்தகத் தள்ளுபடி வீதம் (MDR) எனப்படும் சேவைக்கட்டணத்தை முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த மாற்றத்தின் மூலம், சிறு வணிகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பணப் பயன்பாட்டைக் குறைத்து, டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவித்தல் மற்றும் நாணயத்தாள்கள் மற்றும் சில்லறை நாணயங்கள் மீதான தங்கியிருப்பைக் குறைத்தல் என்பன இதன் முக்கிய நோக்கங்களாகும்.
தற்போது இலங்கையின் முதிர்ச்சியடைந்த மக்கள் தொகையில் 89% பேர் வங்கி வசதிகளைக் கொண்டுள்ளனர்.
CEFTS கட்டமைப்பு ஊடாக காலாண்டுக்கு சுமார் 6.3 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான 68 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
20க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஆதரவுடன் இயங்கும் LankaQR வசதி, தற்போது சுமார் 450,000 வர்த்தக நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளது.
இருப்பினும், 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு தரவுகளின்படி, புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு 1.48 டிரில்லியன் ரூபாவாக இருக்கும் நிலையில், LankaQR பரிவர்த்தனைகள் மாதம் ஒன்றிற்கு சுமார் 395,000 என்ற அளவிலேயே காணப்படுகின்றன.
இந்த இடைவெளியைக் குறைப்பதே புதிய திட்டத்தின் இலக்காகும்.
நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வகையில் விசேட குலுக்கல் முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் வாராந்தம் மற்றும் மாதாந்தம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, 10 இலட்சம் (1 மில்லியன்) ரூபாய் வரை பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய “சமூகத் தெரிவுநிலை சுட்டெண்” (Social Visibility Index) ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த முயற்சி இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரப் பங்கேற்பை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment