Top News

அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

 அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர விளக்கமளித்துள்ளார். 




அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து தெளிவுப்படுத்தும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுவாக ஒவ்வொரு மாதமும் 1ஆம் திகதி நிலவும் சந்தை விலையின் அடிப்படையிலேயே எரிபொருள் கொடுப்பனவுகள் கணக்கிடப்படுகின்றன.



எனினும், மார்ச் 1, 2026 அன்று நிலவிய எரிபொருள் விலையை ஒரு அளவுகோலாக கொண்டு, அதே விகிதத்தை ஏப்ரல் மாதத்திற்கும் தொடர அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மார்ச் மாதத்தில் எரிபொருள் விலைகள் இரண்டு முறை திருத்தப்பட்டன. இதன் காரணமாக, கொடுப்பனவுத் தொகை மாற்றமடையாமல் இருந்தாலும், அந்த தொகையில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருளின் அளவு குறைவடைந்துள்ளது.

எளிமையாகச் சொன்னால், இது கொடுப்பனவு அதிகரிப்பு அல்ல. தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப கொடுப்பனவு சரிசெய்யப்படாததால், உண்மையில் அவர்களுக்குக் கிடைக்கும் எரிபொருளின் அளவு குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்தின் செலவீனங்களை மேலாண்மை செய்யும் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை மார்ச் 1ஆம் திகதி விலையிலேயே கொடுப்பனவுகள் கணக்கிடப்படும் எனவும், எரிபொருள் செலவுகளுடன் தொடர்புடைய ஏனைய கொடுப்பனவுகளும் இதே அளவுகோலின் கீழ் மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post