Top News

இலங்கை பெண்களின் தலைமுடியில் இருக்கும் ஆபத்து! ஆராய்ச்சியில் அதிசய தகவல்

 இலங்கைப் பெண்களின் தலைமுடியில் குறிப்பாக புத்தளம் பகுதியில் வாழ்வோருக்கு பாதரசம் உலோகம் அபாயகரமான அளவில் காணப்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.இவர்கள் தொழில் ரீதியாக பாதரசத்துடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்களாவர்.




தரம் குறைந்த நிலக்கரியை எரிப்பதன் மூலம் இலங்கையில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் பொது சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஆலோசகருமான ஹேமந்த விதானகே இது குறித்து தெரிவிக்கையில்,
தரம் குறைந்த நிலக்கரியை எரிக்கும்போது வெளியேறும் பாதரசம் சூழலிலும் கடல்வாழ் உயிரினங்களிலும் தேங்குவதாகவும் இறுதியில் உணவுச் சங்கிலி ஊடாக மனித உடலுக்குள் நுழைவதற்கும் வாய்ப்பு இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுவதாகத் தெரிவித்தார்.

18 முதல் 44 வயதுக்குட்பட்ட 28 பெண்களின் தலைமுடியில் பாதரச அளவு 1 ppm ஐ விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1ppm என்பது 2000 ஆம் ஆண்டில் அமெரிக்க தேசிய ஆராய்ச்சி கவுன்சிலால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு அளவாகும்.
சில பெண்களிடம் இந்த அளவு 15.584 ppm வரை உயர்ந்துள்ளது.

இது மிகவும் பாரதூரமான நிலையாகும்.
நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் போது அதில் அடங்கியுள்ள பாதரச அளவு குறித்த தெளிவான தகவல்கள் வழங்கப்படுவதில்லை என விதானகே குற்றம் சுமத்தினார்.
நுரைச்சோலை, பனியடிய, நாரக்கல்லிய மற்றும் புத்தளம் களப்புப் பகுதிகளைச் சூழவுள்ள மக்கள் ஏற்கனவே பாதரச நச்சுத்தன்மைக்கு ஆளாகியிருக்கலாம் என அவர் எச்சரித்தார்.

மேலும் இந்த நிலைமை ஜப்பானில் ஏற்பட்ட 'மினமாட்டா'  போன்றதொரு பாரிய சுகாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் மாசுக்கள் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் இருந்தாலும் சமீபகாலமாக அவை கணிசமாக அதிகரித்துள்ளன.

குறிப்பாக 2026 பெப்ரவரி மாத தரவுகளின்படி, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, துகள்கள் மற்றும் சல்பர் டை ஆக்சைடு ஆகியவற்றின் வெளியேற்ற அளவு முன்னரை விட அதிகரித்துள்ளது.
இவை அனைத்தும் தற்போது சட்ட ரீதியான எல்லைக்குள் இருந்தாலும், நிலக்கரியின் தரம் மற்றும் அதன் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து இது பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post