Top News

22 பெண்களோடு திருமணம் திகைக்க வைத்த பலே ஆசாமி எப்படி சிக்கினார்?

 கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச் சென்றார்.




இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த பாகுலேயன் (வயது 56) என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த பாகுலேயன் தலைமறைவானார்.
இந்த நிலையில் நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மனைவியை திருப்திபடுத்த நகை பறிப்பில் ஈடுபட்டது அம்பலமானது.

ஒரு மனைவியா? என போலீசார் கேட்க அவர் அளித்த பதில் போலீசாரை திகைக்க வைத்தது. மாவட்டம்தோறும் மனைவிகள் இருப்பதாக கூறி தம்பட்டம் அடித்துள்ளார்.

அதாவது பாகுலேயன் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்துள்ளார். இவ்வாறு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றி மணமுடித்துள்ளார்.

ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் தனது பெயரை மாற்றி மாற்றி கூறி லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளார். அதன்படி இவருக்கு தாஸ், பாபு, சுந்தரன், ராஜன், விஜயன், கல்யாணராமன் என பல பெயர்கள் உள்ளன.
மேலும் தனது மனைவிகளை திருப்திபடுத்தவும். அவர்களுக்கு விதவிதமாக நகைகளை அணிவித்து அழகு பார்க்கவும் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறிப்பாக பூட்டப்பட்டு கிடக்கும் வீடுகளை குறி வைத்து கைவரிசை காட்டியுள்ளார். பாகுலேயன் மீது கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பன போன்ற தகவல்கள் போலீஸ் விசாரணை மூலம் அம்பலமானது.
இதையடுத்து பாகுலேயனை போலீசார் ஆற்றிங்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பலே ஆசாமி 22 பெண்களை மணந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post