தந்தையால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட o/l மாணவி: கருணை காட்டிய பொலிஸார்!

Valluvan Media
0

 தந்தையின் தாக்குதலால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், நேற்றூ நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையின் கணித வினாத்தாளுக்குத் தோற்றுவதற்கு அழுத்கமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 




இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் தர்கா நகரைச் சேர்ந்த மாணவியொருவர், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பரீட்சையை முடித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர், 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் தனது சகோதரியுடன் அருகிலுள்ள நண்பியின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்குத் தாமதமாகியுள்ளது. 

பிள்ளைகள் இருவரும் வருவதற்கு முன்னரே வீட்டிற்கு வந்திருந்த தந்தை, இது குறித்து ஆத்திரமடைந்து இரண்டு மகள்களையும் தாக்கியுள்ளார். 

தந்தையின் தாக்குதலைத் தாங்க முடியாமல், சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவியும் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அவரது சகோதரியும் அழுத்கமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதனையடுத்து, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முறைப்பாட்டைப் பதிவுசெய்து, இரண்டு மாணவிகளையும் அழுத்கமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது. 

பின்னர் அவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

அங்கு அழுத்கமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் சஞ்சீவவிடம் மூத்த மகள் நடந்தவை அனைத்தையும் கூறியுள்ளார். 

அதற்கமைய, நிலையப் பொறுப்பதிகாரி இன்று காலை பொலிஸ் ஜீப் வண்டியொன்றை இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மாணவிக்கு வழங்கி, தேவையான உணவு, பானங்கள் மற்றும் எழுதுகருவிகள் அனைத்தையும் வழங்கியுள்ளார். 

பின்னர் களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் அனுமதியுடன் அவர் பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

மாலை 4.10 மணிக்கு பரீட்சை முடிந்ததும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பின் கீழ் மீண்டும் மாணவியை நாகொடை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

தாயின் அரவணைப்பின்றி தந்தையுடன் வசித்துவந்த மாணவிகளே இந்தத் துரதிர்ஷ்டவசமான நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர். 

இதேவேளை, மாணவிகளைத் தாக்கிவிட்டுத் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான தந்தையைக் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top