தற்போது 17 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் தொழில் புரிந்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் பங்களிப்பு:
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கைத் தொழிலாளர்கள், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமான பங்காற்றி வருகின்றனர். கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம், அவர்கள் மூலம் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாக நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும் ஸ்திரப்படுத்துவதற்காகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் உள்ளவர்கள் வழங்கும் இந்தத் தனித்துவமான பங்களிப்பை, அரசாங்கம் பெருமையுடன் பாராட்டுவதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டிற்குப் பெரும் வருவாயை ஈட்டித் தரும் இத்தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
