தோசை சாப்பிட்ட இரு பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த சோ*கம்!

Valluvan Media
0

 குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தயார்நிலை (Ready-made) தோசை மாவை வாங்கி உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




அகமதாபாத் நகரின் நரோடா பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், அருகிலுள்ள கடையில் தயார்நிலை தோசை மா பெக்கெட் ஒன்றை வாங்கியுள்ளனர். அன்றைய இரவு அந்த மாவில் தோசை சுட்டு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுள்ளனர். உணவு உட்கொண்ட சில மணி நேரங்களிலேயே தந்தை, தாய் மற்றும் அவர்களது 4 வயது சிறுமி ஆகியோருக்குக் கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில், தோசையை நேரடியாகச் சாப்பிடாத அந்தப் குடும்பத்தின் 3 மாத பச்சிளம் குழந்தையும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தோசையை நேரடியாகச் சாப்பிடாத 3 மாதக் குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தோசை சாப்பிட்ட தாய்க்கு உண நஞ்சானதால், அதன் தாக்கம் தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்குப் பரவி, பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது உறுதி செய்யப்படும்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமியின் பெற்றோருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர், சம்பந்தப்பட்ட கடையில் இருந்த தோசை மா மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

அந்த மா பெக்கெட்டில் காலாவதி திகதி முடிந்துவிட்டதா அல்லது மா தயாரிப்பின் போதே ஏதேனும் நச்சுத்தன்மை கலந்ததா என்பது குறித்துத் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தயார்நிலை உணவுகளை வாங்கும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top