தற்போதைய நெருக்கடி தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

Valluvan Media
0

 நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்காக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.




உலகளாவிய ரீதியில் யுத்தம் எந்த எல்லைக்குச் சென்றாலும், இலங்கை தனது நடுநிலை கொள்கையிலிருந்து தவறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் நிகழ்த்திய விஷேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் சில எரிபொருள் விநியோகஸ்தர்கள் கப்பல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இருந்த போதிலும், சகோதரத்துவ நாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஊடாகச் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து புதிய விநியோகஸ்தர்களுக்குக் கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக, டொலர்களில் வருமானம் ஈட்டும் தனியார் ஏற்றுமதித் தொழில்துறை மற்றும் சுற்றுலா துறை சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கு தேவையான எரிபொருளை அவர்களே இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் தனியார் துறை மூலம் சுற்றுலாத்துறைக்கும் இந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்குமான எரிபொருள் வழங்கப்படும்.

அத்துடன், சுகாதார சேவை, விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காகப் பாதுகாப்பு எரிபொருள் இருப்புகளை 
பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெருந்தோட்டத் துறையில் தேயிலைத் தோட்டப் பயன்பாடுகளுக்கு QR முறைமையின் கீழ் வழங்கப்படும் ஒதுக்கீடு போதாதெனில், அவர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்கப்படும். 

உணவு விநியோக வலையமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அத்தியாவசிய உணவு மற்றும் மரக்கறி விநியோகஸ்தர்களுக்கான எரிபொருள் விநியோகமும் உறுதிப்படுத்தப்படும்.

அதேநேரம், நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது.

மார்ச் மாதம் வரை தேவையான எரிவாயு நாட்டில் இருக்கிறது.

330,000 தொன்களுக்கு மேலதிகமாக 380,000 தொன் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அந்த கப்பல் நாளை அல்லது நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது.

அதேநேரம், அரசாங்கத்தின் எரிபொருள் பாவனையைக் குறைந்தபட்சம் 25 சதவீதத்தினால் குறைக்கும் நோக்கில், அரச பணியாளர்களுக்கு வாராந்தம் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது. 

எனவே பொதுமக்கள் எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top